×

சோனியாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் உள்ள தகவல் தவறாக திரிக்கப்படுகிறது: ஜிதின் பிரசாதா விளக்கம்

புதுடெல்லி: தலைமை மாற்றம் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதிய குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கும்படி, பல்வேறு மாநிலங்களில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதை தொடர்ந்து, தனது கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால், கடந்த ஒரு ஆண்டாக கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், கட்சியில் முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 பேர், சோனியாவுக்கு கூட்டாக கடிதம் எழுதினர். இதனால், கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இப்பிரச்னை தீர்க்கப்பட்டது. இருப்பினும், குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்றவர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து கட்சித் தலைமை பற்றி கருத்து கூறி வருகின்றனர்.

இது, காங்கிரசின் மற்ற மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், ‘கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் மூலமாக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமல் போனால், இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் எதிர்க்கட்சி வரிசையில்தான் காங்கிரஸ் அமர வேண்டியிருக்கும்,’ என நேற்று முன்தினம் குலாம் நபி ஆசாத் கூறியது, இந்த எதிர்ப்பை மேலும் தீவிரமாக்கி இருக்கிறது. இதனால், கடிதத்தில் கையெழுத்திட்ட 23 தலைவர்களையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, கட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்நிலையில், கடிதத்தில் கையெழுத்திட்ட வர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதின் பிரசாதா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் எழுதிய கடிதம், கட்சி தலைமைக்கு எதிரானது அல்ல. கட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று,  கட்சியின் நலனை கருத்தில் கொண்டு எழுதினோம். சோனியாவின் மீதும், ராகுல் காந்தியின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, அவர்களின் தலைமையை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களின் கடிதத்தின் தகவல், தவறாக திரித்துக் கூறப்படுகிறது,’’ என்றார்.

* பேஸ்புக்குக்கு காங். மீண்டும் கடிதம்
இந்தியாவில் பாஜ.வினரின் வெறுப்பு பேச்சுக்கள் பேஸ்புக் தளத்தில் பரவி வருவதை தடுக்கும்படி, கடந்த 17ம் தேதி பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுகர்பெர்க்கிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது. இருப்பினும், பேஸ்புக்கில் பாஜ.வின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்வாக குற்றச்சாட்டு நீடிக்கிறது. இதனால், இது பற்றி நேற்று 2வது முறையாக சுகர்பெர்க்கிற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் கடிதம் எழுதியுள்ள அதில், ‘பேஸ்புக்கின் இந்திய பிரிவு மீது ஏற்கனவே நாங்கள் கூறிய புகார் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Jitin Prasada ,Sonia , Sonia, written letter, misrepresentation of information, interpretation of Jitin Prasada
× RELATED பொய், வெறுப்பின் ஆதரவாளர்களை...